தயங்கியபடியே மஹா அக்கா வீட்டிற்குள் நுழைந்தான். கொள்ளை புறத்தில் மஹா அக்காவின் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருந்தனர். மஹா அக்கா சப்பாத்தி தேய்த்துகொண்டிருந்தாள்.
இலக்கியா நாற்காலியில் உக்கார்ந்து வார மலர் குறுக்கெழுத்து கட்டங்களை நிறப்பி கொண்டிருந்தாள். கருப்பு நிற சல்வார் அணிந்திருந்தாள் துப்பட்டாவுடன். நிமிர்ந்து அவனை பார்த்துவிட்டு தலையை குனிந்துகொண்டாள்.
“வாடா” என்றாள் மஹா அக்கா. “என்னக்கா தேடுனியாமே” என்றான் தயங்கியபடியே. “ஆமாடா. இந்த டிவி காலேலருந்து எடுக்கல. ஒரு சேனலுமே வரல. கொஞ்சம் என்னனு பாரேன். நாடகம் பாக்க முடியலன்னு மூஞ்சிய தூக்கி வச்சுகிட்டு உக்காந்திருக்கா பாரு” என்றாள்.
மதன் இலக்கியாவை திரும்பி பார்த்தான். அவள் பாவமாக இவனை பார்த்தாள். இவனுக்கு சிரிப்பு வந்தது. அவள் மஹா அக்காவிடம் இவனை பற்றி எதுவும் சொல்லவில்லை என்பது உறுதியானது. நிம்மதி பெருமூச்சுவிட்டான். திறமையை காட்ட வேண்டிய நேரம் என டிவியை நோக்கி சென்றான்.
டிவியை ஆன் செய்தான். புஸ் என்ற சத்தத்துடன் ஈ மொய்த்து கிராமம் என்பதால் அப்போது அங்கு கேபிள் எல்லாம் கிடையாது. D2H தான். ரிசீவரை செக் செய்தான். பின்னை கழட்டி சொருகினான். எல்லாம் சரியாக இருந்தது. ஆனால் படம் மட்டும் வரவில்லை. ஒன்றும் பிடிபடவில்லை. இருவரும் இவனையே பார்த்து கொண்டிருந்தார்கள். கடவுளே காலை வாரிடாதே என்று நினைத்துக்கொண்டு யோசித்தான்.
டக்கென யோசனை வந்தவனாய் ஆண்டனாவை தேடி வெளியில் வந்தான். வெளிப்புற சுவரில் ஆணி அடித்து ஆன்டெனாவை பொருத்தியிருந்தனர். LNBஐ திருகி பார்த்தான். பிறகு ஒயரை கழட்டினான். கத்தியை வாங்கி ஒயரை சீவிட்டு மறுபடி பொருத்தினான். படம் தெரிய ஆரம்பித்தது.
“ஏ! என துள்ளி குதித்தாள் இலக்கியா. அவள் முகத்தில் அவ்வளவு சந்தோஷம். “சந்தோஷமா?” என்றான். “ரொம்ப” என் அவனை பார்த்து சிரித்தாள். “இவன் ரொம்ப புத்திசாலிடி. எல்லா வேலையும் பண்ணுவான் நம்ம ஊருல டிவி, போன் எந்த பிரச்சனைன்னாலும் இவன்தான். நல்லா படம் வரைவான்” என்றாள் மஹா அக்கா. அவன் நெளிந்தாலும் உள்ளுக்குள் சந்தோஷப்பட்டுக்கொண்டான்.