காலை மணி ஏழு. என் செல்போன் அலாரம் “சிரிச்சு சிரிச்சு வந்தா சீனா தானா டோய்” என்ற பாட்டுடன் ஒலிக்கத் தொடங்கியது. அப்படியே புரண்டு படுத்துவிட்டு செல்லைத் தேடினேன். கைக்குத் தட்டுப்படாமல் போகவே விழித்துப் பார்த்தேன். அது டேபிளின் விழிம்பில் கீழே விழத்தயாராக இருந்தது. எடுத்து அலாரத்தைப் நிறுத்தினேன். அதன் டிஸ்ப்ளே 22,ஜுன்,2012 என்று காட்டியது. அதை வைக்கப் போன நான் சுதாரித்தேன்.
“அய்யோ இன்னிக்கி வெள்ளிக் கிழமை. அவ கோயிலுக்கு போவாளே?”
அவசர அவசரமா எழுந்து பைனாகுலரைத் தேடினேன். அது கட்டிலுக்கு கீழே கிடந்தது. எடுத்துக் கொண்டேன். பாத்ரூமிற்க்கு ஓடினேன். டூத்பேஸ்ட்டே பிரஸ்சில் எடுத்துக்கொண்டு ஜன்னல் வழியே கீழே பார்த்தேன். அப்பாவும் அம்மாவும் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர்.
நாங்கள் இருந்தது மூன்றாவது மாடி. அது ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு. எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இங்கேதான் இருக்கிறோம்.