இந்த வாரம், திங்கட்கிழமை மாலை 5.12 மணி நான் எங்கள் காலேஜ் லைப்ரரியில் ஒரு புத்தகத்தை எனக்கு முன் விரித்து வைத்தபடி அமர்ந்திருந்தேன். தலையை நிமிர்த்தி வால் க்ளாக்கை பார்த்தேன். ஐந்து மணிக்கு மேல் ஆகியிருந்தது. சுற்றிப் பார்த்தேன். என்னையும் சிந்துஜாவையும் தவிர யாருமே லைப்ரரியில் இல்லை. நான் மெல்ல சிந்துஜாவிடம் கேட்டேன். “சிந்து.. கெளம்பலாமாடி..?” “இல்லடி.. நான் இன்னும் கொஞ்சம் நேரம் படிச்சுட்டு வர்றேன்.. நீ வேணா கெளம்பு..!!” சொல்லிவிட்டு அவள் புத்தகத்துக்குள் தலையை கவிழ்ந்து கொண்டாள். எனக்கு எரிச்சலாக வந்தது. திமிர் பிடித்தவள். வேண்டும் என்றே, என்னை வெறுப்பேத்த வேண்டும் என்றே புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறாள். நானும் சலிக்காமல் புத்தகத்தின் மீது பார்வையை வீசினேன். புரிகிறதோ இல்லையோ வரி வரியாக வாசிக்க ஆரம்பித்தேன்.என் பெயர் ப்ரியா. பிரியதர்ஷினி. அப்பா, அம்மாவுக்கு ஒரே பெண். இஞ்சினியரிங் காலேஜில் பர்ஸ்ட் இயர். இந்த சிந்துஜா சனியன் எல்.கே.ஜி யில் இருந்தே என் க்ளாஸ் மேட். க்ளாஸில் நான் எப்போதும் பர்ஸ்ட் வந்தால், செகண்ட் வருவது சாட்சாத் இந்த சனியன்தான். அதுவும் மார்க் டிபரன்ஸ் சிங்கிள் டிஜிட்டில்தான் இருக்கும். அந்த அளவுக்கு சின்ன வயதில் இருந்தே எங்களுக்குள் கடும் போட்டி. எல்.கே.ஜி யில் இருந்து இந்த சனியனுடன் போட்டியிட்டு, போட்டியிட்டு நான் களைத்து போனேன். படிப்பில் எப்போதும் இவளை விட ஒரு படி மேலே இருக்க, நான் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. ப்ளஸ் டூவுடன் கஷ்ட காலம் முடிந்தது என்று நிம்மதியாக இருந்தேன். ஆனால் இந்த சனியன் சப்பனக்கால் போட்டுக்கொண்டு, காலேஜில் பக்கத்து சீட்டில் வந்து அமர்ந்தபோது நொந்து போனேன். இவள் இப்படி லைப்ரரியில் உட்கார்ந்து சின்சியராக படித்துக் கொண்டிருக்கும்போது, எழுந்து வீட்டுக்கு செல்ல, என்னுடைய போட்டி மனசோ இல்லை பொறாமை மனசோ இடம் தரவில்லை. விருப்பமே இல்லாமல் வீம்புக்கு வேகவேகமாக புத்தக வரிகளை வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் லைப்ரரி கதவை படாரென்று திறந்துகொண்டு அந்த நான்கு பெண்கள் உள்ளே நுழைந்தார்கள். எங்கள் சீனியர்ஸ். அவர்களை பார்த்ததும் எனக்கு கைகால் எல்லாம் உதற ஆரம்பித்தது. சிந்துஜாவுக்கு என்னவெல்லாம் உதறியதோ..? பயம் அப்பிய முகத்துடன் படக்கென்று எழுந்துகொண்டாள். நானும் உடம்பெல்லாம் வெடவெடக்க எழுந்து நின்றேன். அந்த நாலு பேருக்கும் தலைவி மாதிரியும், தடிமாடு மாதிரியும் இருந்தவள், முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு எங்களிடம் கேட்டாள்.