நான் எதுவும் புரியாமலே வெளியேறினேன். பெட்ரூமுக்கு போனேன். அண்ணன் கட்டிலில் படுத்துக் கொண்டு எதையோ படித்துக் கொண்டு இருந்தான்.
“டேய் அஜித்..”
“என்னடா?” அண்ணன் என்னை நிமிர்ந்து பார்த்து கேட்டான்.
“எதோ பூஜை அது இதுன்னு சொல்றாங்க.. உனக்கு ஏதாவது தெரியுமா?” நான் கேட்டவாறே அவனுக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டேன்.
“உனக்கு தெரியாதா? தீபாவளிக்கு முந்தின நாளு, நடுராத்திரி பொம்பளைங்க எல்லாம் சேர்ந்து ஒரு பூஜை பண்ணுவாங்க. கல்யாணம் ஆன பொம்பளைங்க மட்டுந்தான். கல்யாணம் ஆகாத பொம்பளைங்க கிடையாது”
“என்னடா இது? நான் இதுவரை கேள்விப் படாத புது பழக்கமா இருக்கு?”
“நம்ம வீட்ல மட்டும் இந்த பழக்கம் இல்லைடா. நம்ம ஊர்ல எல்லா வீட்லயும் பொம்பளைங்க இன்னைக்கு நைட்டு அந்த மாதிரி பூஜை பண்ணுவாங்க. இது நம்ம ஊர் வழக்கம்”
“எதுக்காகவாம் இந்த பூஜை?”
“எல்லாம் புருஷன் நல்லா இருக்கனும்-கறதுக்காகன்னு சொல்றாங்க. எனக்கு தெரியலைப்பா”
“பூஜைன்னா… என்ன பண்ணுவாங்க? யாருக்கு பூஜை?”
“அது மகா சீக்ரட். நானும் நம்ம ஊர்ல எல்லா ஆம்பளைங்ககிட்டையும் கேட்டு பாத்துட்டேன். ஒருத்தனுக்கும் ஒண்ணும் தெரியலை. எல்லாம் பயங்கர ரகசியம். ஒன்னு மட்டும் எனக்கு தெரியும்”
“என்ன..?”
“ஏதேதோ பலகாரம் பண்ணுவாளுங்க. அதை ஆம்பளைங்க கண்ணுலேயே காட்ட மாட்டாளுங்க. காலைல பாத்தா அந்த பலகாரம் இருக்காது. மாயமா மறைஞ்சுரும். நைட்டே எல்லாத்தையும் தின்னு தீத்துருவாளுங்க”
“என்னடா என்னென்னவோ சொல்ற? ஒரே மர்மமா இருக்கே..?”
“ஆமாண்டா. எனக்கும் இவளுகலாம் என்ன பண்றாளுகன்னு ஒரே புதிராத்தான் இருக்கு”
அண்ணன் சொல்லிய செய்திகள் எனக்குள் ஆயிரம் குழப்பங்களை ஏற்படுத்தின. எல்லாப் பொம்பளைகளும் சேர்ந்து கொண்டு என்ன செய்கிறார்கள்? ராத்திரி நேரத்தில் அப்படி என்ன ரகசிய பூஜை? பூஜை என்ற பெயரில் என்ன செய்வார்கள்? அதை ஏன் இவ்வளவு ரகசியமாக வைத்திருக்கிறாள்? அவர்கள் செய்த பலகாரத்தை கூட ஆண்கள் கண்ணில் காட்ட மாட்டார்களாமே, ஏன்? விடை தெரியாத பல கேள்விகளுடன் நான் உறங்கப் போனேன். எப்போது தூங்கினேன் என்று தெரியாமல் தூங்கிப் போனேன். திடீரென என் தோளைப் பிடித்து யாரோ உலுக்குவது போல இருக்க விழித்துக் கொண்டேன். அஜித்துதான் என்னை எழுப்பிக் கொண்டு இருந்தான்.
“எ…என்னடா..?” நான் கண்களை பிரிக்ககூட முடியாமல் கேட்டேன்.
“எழுந்திரிடா… என்கூட வா”