சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த ஒரு சம்பவத்தைக் கூற விரும்புகிறேன்.. நான் அப்போது விடுமுறையில் வீட்டிலிருந்தேன். என் மனவி வயிற்றில் சிறிதளவு நோகிறது என புகார்செய்தாள். வலி பெரிதாக இல்லை. என்றாலும் டாக்டரிடம் காட்டுவது நல்லது என்று நினைத்தோம். நாங்கள் வசிக்கும் வீட்டின் முன்னால் ஒரு டாக்டர் இருந்தார். இந்த அப்பார்ட்மெண்ட்டுக்குநாம் குடி வந்து சில மாதங்களே னதால் அந்த டாக்டரைப் பற்றி பெரிதாக ஒன்றும் அறிந்திருக்க வில்லை. இருந்தாலும் வயிற்றுநோவை அலட்சியமாக விட்டுவிடாமல் அவரிடம் காட்டும்படி கூறினேன். நண்பகல் 1.30 மணியளவில் பிரியா, என் செல்ல மனைவியின் பெயர் அதுதான், டாக்டரைப் பார்க்க கிளம்பினாள். டாக்டரின் டிஸ்பென்சரியின் முன் வாசலை நெருங்கியபோதுதான் வாசலில்இருந்த போர்ட்டை கவனித்தாள்.
கன்சல்டிங் அவர்ஸ் பி.ப 2.00 மணியிலிருந்து என போடப்பட்டிருந்தது. அவள் அரை மணி முன்னதாகச் சென்றுவிட்டாள். அவள் தயக்கத்தைக் கவனித்த அயலில் நின்ற சிறுவன் ஒருவன் டாக்டர் சற்று முன்னர்தான் உள்ளேசென்றதைப் பார்த்ததாக கூறினான். சரி, நம் அதிஷ்டம் இன்று முன்னதாகவே டாக்டர் வந்துவிட்டார்.நாம் முதல் ஆளாக டாக்டரைப் பார்த்துவிடுவோம் என்று எண்ணியபடி உள்ளே நுழைந்தாள். வரவேற்பறையில் ஒருவருமில்லை. வெறிச்சோடி இருந்தது. டாக்டரின் அறையைக் கவனித்தபோது உள்ளே லைட் எரிவது கதவின் மங்கிய கண்ணாடிக்கூடாக தெரிந்தது. உள்ளே செல்வோமா விடுவோமா என்ற தயக்கத்துடன் கதவை மெல்லியதாகத் தட்டியபோது முனகல் போன்ற குரல் ஒன்றுகேட்டது. டாக்டர்தான் உள்ளே வரும்படி குரல் கொடுக்கிறாரோ என்ற நினத்தபடி கதவை மெல்ல திறந்தாள். அங்கே கண்ட காட்சி அதிர்ச்சியைத் தருவதாக இருந்தது. அறையின் அளவு பெரிதாக இருக்கவில்லை. ஆனால் ஒரு வைத்தியருக்கு தேவையான வசதிகள் கொண்டு அமைக்கப் பட்டிருந்தது. அறையின் ஒரு பக்கத்தில் பெரிய மேசை ஒன்று போடப்பட்டிருந்தது. அதில் இரத்த அழுத்தம் பார்க்கும் கருவியும் கம்யூட்டர் ஒன்றும் காணப்பட்டன. மேசைக்கு வலது பக்கமாக மடித்துவிடக்கூடிய ஸ்கிரீன் தடுப்பொன்றும் அதன் பின்னால் பார்க்கக்கூடியதாக ஸ்ரெச்சர் ஒன்றும் உருளக்கூடிய சிறிய மேசையும் காணப்பட்டன. இடதுபக்கமாக நோயாளிகள் செக்கப் பண்ணும் கட்டில் ஒன்று காணப்பட்டது.